நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மரப்பரை ஊராட்சி. இங்கு அங்காளம்மன், மாரியம்மன், பெருமாள், பொன் காளியம்மன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் பொன் காளியம்மன் கோவிலை மட்டும் தனியாக பிரித்து அதன் நிர்வாகத்தைத் தங்களிடம் வழங்குமாறு கொங்கு வேளாளர் சமூகத்தினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதற்கு அறநிலையத்துறையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, அறநிலையத்துறை ஆணையர் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி மரப்பரை ஊராட்சியை சேர்ந்த கணேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதியன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பின் தொடக்கத்தில், 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியாரின் கவிதை வரிகளை அவர் மேற்கோள் காட்டியிருந்தார். கோவில் பொதுவானது என்பதால் அனைத்து பக்தர்களாலும் அதை வழிபடவும் நிர்வகிக்கவும் முடியும் எனக் கூறியுள்ள நீதிபதி பரத சக்கரவர்த்தி, "சாதி என்பது ஒரு மதப் பிரிவு அல்ல" என தெரிவித்துள்ளார். “சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்குவதற்கு கோவில்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாலான பொதுக் கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளன" எனவும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 25, 26 ஆகியவை மத உரிமைகள் மற்றும் மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாக்கின்றன. அப்படிப் பார்த்தால் எந்த சாதியினரும் கோவிலுக்கு உரிமை கோர முடியாது" எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சாதியின் அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது மத நடைமுறை அல்ல. சாதி ஒருபோதும் மதப்பிரிவாக இருக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோளாக சாதியற்ற சமூகம் உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதி, “சாதியை நிலைநிறுத்தும் எந்த ஒன்றையும் நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்பதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் அறநிலையத்த...